நான் ரவுடி இல்லை டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளவர்கள் தான் குண்டர்கள் போல செயல்படுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’21 சட்டமன்ற இடைத் தேர்தல் எங்களுக்கு முக்கியம்தான் அதில் என்ன சந்தேகம்? எடப்பாடி ஆட்சியை தக்க வைக்க எங்களுடைய இலக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். அது உண்மைதான். தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். ஒ.பி.எஸ், விஜயகாந்த்தை சந்தித்ததன் மூலம் அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. என்னை தினகரன் ரவுடி என்கிறார். நானா ரவுடி? அவருடன் உள்ளவர்வர்கள் குண்டர்கள் போல் செயல்படுகிறார்கள். அதை கண்டிக்க கூடாதா? 

கண்டித்தால் தப்பா. உண்மையை சொன்னால் கசக்கும். அமமுக வெற்றியை ராஜேந்திர பாலாஜி திண்ணையில் உட்காந்து பார்ப்பார் என்று கூறியுள்ளார் தினகரன். நாங்கள் திண்ணையில் உட்காருவோமா, இல்லை அவர் பண்ணையில் உட்காருவாரா என்று என்று தேர்தலுக்கு பின் பார்ப்போம். தைரியமான, நேர்மையான பிரதமராக மோடி உள்ளார். வலுவான பாரதம், வல்லரசு நாடு உருவாக நரேந்திர மோடி பிரதமர் ஆக எங்க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என கூறலாம். அவர்கள் குடும்பத்தில் எனக்கு உதவியவர்கள் தற்போது அவரிடம் இல்லை. அவர் தனிமரமாக உள்ளார். அவர் வெற்றிக்கு நாங்கள் பணியாற்றிருப்போம், அவர் உதவி செய்திருப்பார். அதற்காக அதிமுகவை அவர் அழிக்க நினைத்தால் வேடிக்கை பார்க்க முடியாது. அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலும், திமுக ஆதரவு நிலைப்பாட்டில் முதல்வர் எடப்பாடி மீது அவதூறு பேசுவதால் என்னை போன்றவர்கள் பேசுகிறோம். தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவது எனக்கு இயல்பு கிடையாது, மரபு கிடையாது’’ என அவர் கூறினார்.