மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். இலங்கை தமிழர்கள் குறித்து திமுக நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் இறுதிப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது திமுக என்ன செய்தது என கேள்வி எழுப்பினார். இலங்கை தமிழர்கள் குறித்து பேச திமுகவிற்கு அருகதை இல்லை என்று கூறிய அவர் இலங்கை தமிழர்களின் குடியுரிமை தொடர்பாக மத்திய அரசுடன் அதிமுக பேசும் என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீர் ஆகிவிட்டதாக அமைச்சர் விமர்சித்தார். தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசை ஆதரிப்பதாகவும் எதிரான விஷயங்களை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும் என்றார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருக்குமிடத்தில் தான் அதிமுகவினர் இருப்பார்கள் என்ற அவர் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும் என்றார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை போல உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறப்போவதாகவும் வெற்றி ஒன்றே அதிமுகவின் இலக்கு எனவும் பேசினார். மேலும் சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து ஊராட்சி பதவிகளின் ஏலம் நடந்து வரும்நிலையில் அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை  மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.