அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு..! இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அதிரடி..!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வகித்து வரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்து வருபவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவர் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும் அதிமுகவில் பதவி வகித்து வந்தார். பல்வேறு அதிரடியான கருத்துக்களை செய்தியாளர் சந்திப்பிலும், மேடைகளிலும் பேசி பல சர்ச்சைகளுக்கு ராஜேந்திர பாலாஜி வித்திட்டிருக்கிறார். இந்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்கள் பலத்த எதிர்ப்பை சந்தித்தது. அதேபோல் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் கூறி வந்தார்.
இதன்காரணமாக முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் அவரை கண்டித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தற்போது ராஜேந்திர பாலாஜி வகித்து வரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. எனினும் அவர் எதற்காக நீக்கப்பட்டிருக்கிறார் என்கிற விபரங்கள் வெளிவரவில்லை. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோரின் அதிரடியான நடவடிக்கையால் அமைச்சர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு கடந்த ஆண்டு அமைச்சர் மணிகண்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜியின் கட்சி பதவி பறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.