மக்களிடம் நாங்கள் பாட்டு எழுதி பெயர் வாங்குகிறோம். ஆனால், திமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கிவிடுகிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசுகையில், “தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கிவருகிறார்கள். மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்திவருகிறது. மக்களிடம் பொய்யைச் சொல்லி ஓட்டு வாங்க திமுகவினர் நினைக்கிறார்கள். நாங்கள் பாட்டு எழுதி பெயர் வாங்குகிறோம். ஆனால், திமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கிவிடுகிறார்கள். எனவே நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.


தேர்தல் வந்தால் திமுகவினர் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்வார்கள். இதற்கு முன்னால் அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் அல்லவா? அப்போதெல்லாம் என்ன செய்தார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். மக்கள் நலத்திட்டங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்று திமுகவோடு ஒரே மேடையில் விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன்.” என்று ராஜேந்திர பாலாஜி பேசினார்.