rajendra balaji remember jayalalitha memories

தனக்கு உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா கசாயம் வைத்து கொடுத்து அனுப்பியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா உயிரிழந்து ஒராண்டுக்கு மேலாகியும் அவரது இறப்பு குறித்த பேச்சுக்கள் குறையவில்லை. ஜெயலலிதா இறந்தாலும் அவரையும் அவரது இறப்பையும் மையமாக வைத்தே அரசியல் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதாவை பற்றிய ஒரு நிகழ்வை நினைவுகூர்ந்து உருகியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதுதொடர்பாக பேசியுள்ள ராஜேந்திர பாலாஜி, ஒருமுறை எனக்கு காய்ச்சல் வந்து அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டேன். அதை அறிந்த ஜெயலலிதா, எனது உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனைக்கு வந்து என்னிடம் ஒரு கசாயத்தை கொடுத்தனர். அந்த கசாயத்தை ஜெயலலிதாவே தயாரித்து கொடுத்ததாக கூறி கொடுத்தனர். அப்போதும் கூட நான் சந்தேகத்துடன்.. அம்மாதான் கொடுத்தாரா என கேட்டேன். ஆம் என்றனர் அவர்கள். உடனே அந்த கசாயத்தை குடித்தேன். காய்ச்சல் நின்றுவிட்டது. இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்திருந்தால், ஜெயலலிதா என்னை நேரில் வந்தே பார்த்திருந்திருப்பார். அந்த அளவுக்கு மனிதநேயம் மிக்கவர் என ஜெயலலிதா குறித்த நினைவுகளை உருக்கமாக பகிர்ந்தார்.