நாடாளுமன்ற குளிர்காலத்  கூட்டத்தொடர் கடந்த வாரம் திங்கட்கிழமையன்று தொடங்கியது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பல்வேறு கேள்விகளை கேட்டு உள்ளனர். பாலகோட் தீவிரவாத முகாமில் தீவிரவாதிகளின் நடவடிக்கை, கர்தாபூர் வழித்தடம் பாதுகாப்பு மற்றும் ஜம்மு அண்டு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி கேட்டு இருந்தனர்.

மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இந்த வாரம் பதில் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயாராகி விட்டதாக தெரிகிறது. பல்வேறு விஷயங்கள் தொடர்பான 54 கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் ரெடி செய்துள்ளது. இந்த 54 கேள்விகளில் 9 கேள்விகள் காஷ்மீர் விவகாரம் தொடர்பானது.

ஜம்மு அண்டு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளால் ஏற்பட்ட இழப்புகள், சிறப்பு சட்டப்பிரிவு ஏன் நீக்கப்பட்டது, புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம் தொடர்பான 9 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. இந்த வாரம் மாநிலங்களவை நடவடிக்கையின் போது மத்திய உள்துறை அமைச்சகம் தனது பதில்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.