இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை அழிக்கும்  நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் பரவல் அதிகரித்துள்ள நிலையில் , இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் ஓய்வு எடுக்கும் நேரத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து அவைகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும்  ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?

அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது, ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர் இடபெயர்வு (migration),பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்படவேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு  நீரிலும் நிலத்திலும் கலப்பதை எந்த வகையிலும் தடுக்க முடியாது.

 

இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் இடப்பெயர்வை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. 

ஏற்கனவே கணித்தது போல, ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் பரவியுள்ளன. மத்திய வேளாண் அமைச்சகம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ட்ரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் மருந்து தெளித்து வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கத் தொடங்கியுள்ளது. எனவே அவைகளை அழிக்க, வேளாண் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக இரவு  நேரத்தில் விவசாய நிலத்தில் வெட்டுக்கிளிகள் ஓய்வெடுக்கும் போது மருந்து தெளித்து  அழித்து வருகின்றனர்.  பகல் நேரத்தில் வெட்டுக்கிளிகளை விரட்ட அதிக சத்தம் எழுப்ப விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம், அதேபோல்,  இரவு நேரத்தில் எந்த இடத்தில் வெட்டுக்கிளிகள் ஓய்வு எடுக்கிறது என்பது பற்றி வேளான் இயக்க கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி  விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.