தென் மாவட்டங்களில் பதவி ஆசையோடு அரசியலில் வலம் வருபவர்கள் ஏராளம். அதிமுக அமைச்சரவையை மதுரையை சேர்ந்த இருவர் அலங்கரிக்க, மூன்றாவது நபரும் அமைச்சர் நாற்காலிக்கு அடிக்கோலி வருவதுதான் ஆளும் கட்சியின் ஹாட் டாபிக்!

செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் என இருவர் மதுரை மாவட்டத்தில் இருந்து அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஜெயலலிதா காலத்தில் இருந்தே அமைச்சராக காலம் கனியும் எனக் காத்திருந்தார் எம்.எல்.ஏவான ராஜன் செல்லப்பா. இருக்காதா பின்னே...? தனக்கு ஜூனியரான ஆர்.பி. உதயகுமாரும், செல்லூர் ராஜுவும் அமைச்சர்களாக இருக்கும்போது ராஜன் செல்லப்பா மட்டும் ஆசைப்படாமல் இருப்பாரா? ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த ஆசை வெறியாகி எப்படியாவது அமைச்சர் பதவியை பிடித்து விட வேண்டும் என காய் நகர்த்தி வந்தார்.

இதற்காக கடந்த 2 ஆண்டாக கடும் முயற்சி எடுத்தும் காரியம் கைகூடவில்லை. அவரது முயற்சிக்கு செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் முட்டுக்கட்டை போட்டு வருவதாக மதுரை உடன்பிறப்புகள் அவ்வப்போது தகவல் பரப்பியதும், பின்னர் ராஜன் செல்லப்பாவை அவர்கள் அனுசரித்து செல்வதும் அவ்வப்போது நடந்து வந்தது. அத்தோடு ஏற்கனவே, 2 பேர் மதுரை மாவட்டத்தில் இருக்கும்போது, எப்படி முடியும்? என மூத்த அமைச்சர்கள் சிலரும் போர்க்கொடி தூக்கி வந்தார்கள். சமீபத்தில் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பதவி பறிபோனதால், அந்த பொறுப்பை எப்படியாவது பிடிக்க வேண்டும் என சென்னை தலைமை அலுவலகத்தில் ஒற்றைக்காலில் தவமாய் தவம் கிடக்கிறாராம் ராஜன் செல்லப்பா. 

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி சிக்கி இருப்பதால் ராஜன் செல்லப்பாவின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்கள் தீவிரமாக எதிர்ப்பதால், ’இவருக்கு எதற்கு இந்த வேலை. அப்படியே எம்எல்ஏவாகவே காலத்தை கடத்திவிட்டுப் போக வேண்டியது தானே..’’ என மதுரை அமைச்சர்களின் கைத்தடிகள் உரக்கவே பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால், ராஜன் செல்லப்பாவோ ’’அமைச்சர் பதவியை எப்படி பிடிக்கிறேன் பாருங்கள்’ என தனது ஆதரவாளர்களிடம் நம்பிக்கை ஊட்டி வருகிறாராம் ராஜன் செல்லப்பா.