எனது சகோதரர் தீபக்கை தெரியும் என்று கூறும் ராஜம்மாள், என்னை யார் என்றே தெரியாது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், 2016 ஆம் ஆண்டில் போயஸ்கார்டன் தோட்ட இல்லத்தில் பணியாற்றிய 31 பேரின் பட்டியலை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வழங்கியிருந்தார். இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமையலராக பணியாற்றிய ராஜம்மாள் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. 

அதன் அடிப்படையில் சமையலராக இருந்த ராஜாம்மாள் நேற்று முன்தினம் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நேரில் பார்த்து பேசினேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியது. அது மட்டுமல்லாது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை யாரென்று தெரியாது என்றும் கூறினார். தீபாவை போயஸ் கார்டனில் பார்த்துகூட இல்லை என்றும் விசாரணை ஆணையத்தில் ராஜம்மாள் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில், ராஜம்மாள் கூறுவதில் துளி கூட உண்மை இல்லை ஜெ.தீபா கூறியுள்ளார்.  இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது: சமையல் வேலை செய்யும் ராஜம்மாள் உயிருக்கு பயந்தோ அல்லது ஆதாயத்திற்காகவோ என்னை தெரியாது என பொய் சொல்லியிருக்க வேண்டும். 

அவர் கடந்த 1996 இல் சசிகலாவால் நியமிக்கப்பட்ட வேலையாள். எனது அத்தையால் 1998 இல் போயஸ் கார்டனை விட்டு துரத்தப்பட்ட ராஜம்மாள் மீண்டும் சசிகலாவால் உள்ளே சேர்க்கப்பட்டார். நிச்சயம் ராஜம்மா கூறுவதில் துளி கூட உண்மை இல்லை. என்னை யாரென்றே தெரியாது எனக் கூறும் அவர். என் சகோதரர் தீபக்கை தெரியும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. நானே ராஜம்மாவை 1996 காலகட்டத்தில் நேரில் பார்த்துள்ளேன்.

 

அவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மக்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. இவர்களது முரண்பட்ட வாக்குமூலங்கள் மூலம் போயஸ் இல்லத்தில் ஏதோ தவறாக நடந்துள்ளது, என்பது தெளிவாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு ஏற்பட்ட நிலையை மக்களாகிய நீங்கள் என்னோடு சேர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.... அம்மாவின் மர்ம மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்... இவர்களது நாடகத்துக்கு விரைவில் மூடு விழா நடத்தி துரோக கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று தீபா பதிவிட்டுள்ளார்.