முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம்தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயாருமான ராஜாமணி  தங்கபாண்டியன் (84) கடந்த ஒருமாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.

பின்னர், அவரது உடல் அருப்புக்கோட்டை அருகே உள்ள சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில் வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த திமுகவினர் மற்றும் அந்த கிராமத்து பொதுமக்கள், தங்கம் தென்னரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் ராஜாமணி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உதயநிதி, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய  நிர்வாகிகள் அங்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்தினருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.