ஜெயலலிதாவின் பழைய ஆட்சிகாலத்தில் கோலாகலமாக கோலோச்சிவிட்டு பின் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டு அதன் பின் மீண்டும் அம்மாவின் காலை பிடித்து மேலே எழுந்து வந்தவர்களில் வெகு சிலர் கூட இன்று அ.தி.மு.க.வின் ப்ரைம் லிஸ்ட்டில் இல்லை. அப்படியும் தப்பித் தவறி வந்த ஒன்றிரண்டு பேரையும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் சேர்ந்து முடித்து முக்காடு போட்டுவிட்டனர். 

அப்படி கைகழுவப்பட்டவர்கள் பலர் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டனர், ஆனால் ராஜகண்ணப்பனோ அப்படியில்லை. 
சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு சீட் நிச்சயம்! என எதிர்பார்த்த ராஜகண்ணப்பனுக்கு ‘பெப்பே’ காட்டினர் இரு முதல்வர்களும். வெகுண்டெழுந்த கண்ணப்பன் வெளிப்படையாக தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தார். 
அது மட்டுமில்லாமல் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட கணிசமான தென் மண்டல தொகுதிகளில் தன் யாதவ சொந்தங்களை தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தொடர் பிரசாரமும் செய்தார். இதனால் மேற்படி மண்டலங்களில் அ.தி.மு.க.வின் வேட்பாளர்களுக்கு  மிக கணிசமான வாக்கு வங்கியானது பகைமையாகி போனது உண்மை. 

சரி தேர்தல் வரைக்கும் வெச்சு செஞ்சோம், இனியாச்சும் அ.தி.மு.க.வை விட்டுடுவோம்! எனும் எண்ணம் ராஜகண்ணப்பனிடம் இருப்பதான அறிகுறியே இல்லை. மனிதர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அ.தி.மு.க. தலைமையை தாளித்து எடுக்கிறார் தாறுமாறாக. அதில் ஒரு சாம்பிள்...”எனக்கு எம்.பி. சீட் கிடைக்கவில்லை என்பதால் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறவில்லை.  

அங்கே சுயமரியாதைக்கு இடமில்லை என்பதால் வெளியே வந்தேன். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவருக்கும் ஆளுமையே இல்லை. இவங்க ரெண்டு பேருக்கும் செல்வாக்கு எந்தளவுக்கு மோசமாக இருக்குதுன்னு மே 23-க்கு பிறகு தெரிஞ்சு போயிடும். அ.தி.மு.க.வின் அடுத்த உருப்படியான தலைவரை காலம் விரைவில் தீர்மானிக்கும்.” என போட்டுப் பொளந்துள்ளார். கண்ணப்பனின் வாயை அடைக்க படாத பாடு படுகிறது தென்மண்டல அ.தி.மு.க. ஆனாலும் முடியவில்லை. பாவம்!