பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிற்கு நாளுக்குநாள் எதிர்ப்புகள் வலுத்து கொண்டே இருக்கின்றன. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத அதிருப்தியில், பாஜகவுடனான கூட்டணியிலிருந்து ஆந்திர ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் விலகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிற்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன.

தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ், தேசிய அளவிலான மூன்றாவது அணி முன்னெடுப்பை எடுத்துள்ளார். அவருக்கு மம்தா பானர்ஜி ஆதரவும் தெரிவித்துள்ளார். அதேபோல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மூன்றாவது அணியை அமைப்பதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளார். அதற்காக மாநில கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

பாஜகவிற்கு எதிராக ஒருமித்த கருத்துகொண்ட எதிர்க்கட்சிகளை இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ள நிலையில், மூன்றாவது அணி முயற்சியும் நடந்துவருகிறது.

மத்திய பாஜக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது பணமதிப்பு நீக்க நடவடிக்கை. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய நடவடிக்கைகளால் இந்திய பொருளாதார வளர்ச்சி பெருமளவில் தடைபட்டதாக சில பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால் நீண்ட கால அளவில், இந்த நடவடிக்கைகள் நல்ல பலனை கொடுக்கும் என்ற கருத்தும் கூறப்பட்டது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அதுதொடர்பான கடும் குற்றச்சாட்டை ராஜ் தாக்கரே முன்வைத்துள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். மோடி இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பேசிய ராஜ் தாக்கரே, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நீக்கப்பட்டு, புதிய ஆட்சி அமைந்த பிறகு பணமதிப்பு நீக்கம் குறித்து விசாரணை நடத்தினால், சுதந்திரத்துக்கு பிறகான காலத்தில் மிகப்பெரிய ஊழலாக அதுதான் இருக்கும் என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.