காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தோடு, அதையே இலக்காக கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிற்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலையில்,  மோடி இல்லாத பாரதம் என்ற முழக்கத்தை ராஜ் தாக்கரே எழுப்பியுள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிற்கு நாளுக்குநாள் எதிர்ப்புகள் வலுத்து கொண்டே இருக்கிறது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத அதிருப்தியில், பாஜகவுடன் கூட்டணியிலிருந்து ஆந்திர ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் விலகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ், தேசிய அளவிலான மூன்றாவது அணி முன்னெடுப்பை எடுத்துள்ளார். அவருக்கு மம்தா பானர்ஜி ஆதரவும் தெரிவித்துள்ளார். அதேபோல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மூன்றாவது அணியை அமைப்பதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளார். அதற்காக மாநில கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

இப்படியாக பாஜகவிற்கு மட்டுமல்லாமல், காங்கிரசுக்கும் எதிரான நிலைப்பாட்டுடன் ஓரணியில் திரள மாநில கட்சிகள் முயற்சிக்கின்றன.

இந்நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மகாராஷ்டிர நிவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மத்திய பாஜக அரசை விமர்சித்து பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய தாக்கரே, மத்தியில் ஆளும் பாஜக அரசு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என அடுத்தடுத்து பொருளாதார பாதிப்புகளை அரங்கேற்றியுள்ளது. பிரதமர் மோடியின் மோசமான திட்டங்களால் நாடு இன்று பெரும் அபாயத்தில் உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதாக பிரதமர் மோடி கூறி வருகிறார்.

ஆனால் எந்த முதலீடும் இதுவரை வரவில்லை. பக்கோடா செய்வதற்கான மாவு வாங்குவதற்கு பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறாரா? இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது தொடர்கிறது. தூய்மை இந்தியா இயக்கம் உட்பட அனைத்துமே வெறும் பிரச்சாரமாக மட்டுமே உள்ளது. ஆனால் எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு பயனளிக்கவில்லை. வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி இல்லாத பாரதம் உருவாகும் வகையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேணடும் என பேசியுள்ளார்.