கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளங்களை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் விழுந்திருக்கும் அந்த பதிவு. அதாவது, புல்வாமா தாக்குதலின் பின்னணியில் ‘மோடியின் ஸ்டண்ட்’ எனும் வார்த்தை பிரயோகம். 

அதாவது...கார்கில் போரில் மறைந்த வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் நடந்த ஊழல் வெளிப்பட்டபோது அதனை திசைமாற்றிட நாடாளுமன்ற வளாகத்தினுள்ளேயே தீவிரவாத தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றினர் பி.ஜே.பி.யினர். அதேபோல் இப்போது ரஃபேல் ஊழல் விவகாரம் மோடிக்கு எதிராக கொடிகட்டி பறப்பதால், தேர்தலில் தோற்றுவிடுவோம் எனும் பயத்தில் இந்த பயங்கர தாக்குதல்  ஸ்டண்டை நடத்தி பாகிஸ்தானுக்கு எதிராக அதை திசைதிருப்பிவிட்டுள்ளது அதிகார் மையம். நாற்பது பிரேதங்களை வைத்துக் கண்ணீர் வடிப்பதன் மூலம் தேசத்தின் அனுதாப வாக்குகளை அள்ளிட மோடி முயற்சிக்கிறார்! மொத்தத்தில் இந்த சாவுகள் எல்லாம் உள்நாட்டில் திட்டமிடப்பட்ட ஸ்டண்டே! என்று மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் சிலர். 

இதனை ‘எந்த சூழலில் எந்த மாதிரி சிந்திக்கிறார்கள் பாருங்கள். பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு நிகரானவர்கள் இந்த உள்நாட்டு சிறுபுத்தி நபர்கள். இரண்டுமே சகிக்க முடியாத தீவிரவாதம்தான். அன்று நாடாளுமன்ற தாக்குதலின் பின்னணியிலும் நாங்கள் இல்லை, இன்று புல்வாமா கொடூரத்தின் பின்னணியிலும் எங்கள் தலைவர்கள் இல்லை. பிரதமர் மோடிக்கு எதிராக  இப்படி சிந்தித்திருப்பதே மிக குரூரமான மிருக வெறி தாக்குதல்.” என்று கொதிக்கிறது பி.ஜே.பி. 

இந்நிலையில், ரஃபேல் விவகாரத்தை வைத்து கடந்த சில மாதங்களாக மோடிக்கு எதிராக பெரும் அரசியல் யுத்தம் நடத்தி வரும் ராகுல், இந்த விமர்சனத்தை தனக்கு சாதகமாக கையிலெடுத்துக் கொண்டு ஊதி ஊதி அதை விஸ்வரூபமாக்கி மோடிக்கு எதிராக மிக மிக உக்கிரமாக செயல்படுவார்! என்று எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால் ராகுலோ, இந்த சின்ன வயதிலும் மிக பக்குவப்பட்ட அரசியல் தலைவனாக “இது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய நேரம். வேறு எந்தவித சர்ச்சைகளுக்கும் இப்போது இடமில்லை. இந்த கடினமான நேரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், நம் வீரர்களுக்கும், காங்கிரஸ் உட்பட் அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதுணையாக நிற்கும்.” என்று கூறியுள்ளார். 

ராகுலின் இந்த அரசியல் முதிர்ச்சியை கண்டு அசந்து போயுள்ளது பி.ஜே.பி. “ராகுலை எத்தனையோ முறை ‘பாப்பா’ என்று நாடாளுமன்றத்தில் கிண்டல் செய்துள்ளோம். ஆனால் தன் மரபணு மிகப்பெரிய அரசியல் ஆளுமைகளிடமிருந்து வந்துள்ளது என்று நிரூபித்துவிட்டார். எதிர்கட்சியின் தலைவர் எனும் நிலையில் மட்டும் நின்று பிரதமரை வசைபாடி, தேர்தல் அரசியல் செய்யாமல் அவர் எடுத்திருக்கும் தேச நலன் சார்ந்த நடவடிக்கை சிலிர்க்க வைக்கிறது. உண்மையிலேயே சுத்தமான நம் பிரதமருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ராகுல் எடுத்திருக்கும் இந்த முடிவுக்காக அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.” என்று கண் கலங்கி கை கூப்பியுள்ளனர். பப்புடா!