Rahul may take over as Congress chief after Diwali Sachin Pilot

தீபாவளிப் பண்டிகை முடிந்த பின், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார். அவர் கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சச்சின்பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சச்சின் பைலட்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது-

தீபாவளிக்கு பின்

காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. கட்சியின் புதிய தலைவர் தீபாவளிப் பண்டிகைக்கு பின் பதவி ஏற்பார். காங்கிரஸ் கட்சியில்ராகுல் காந்தி தலைமை ஏற்பது என்பது நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. கட்சிக்கு ராகுல்காந்தி தலைமை ஏற்கும் காலம், வழிநடத்தும் நேரம் வந்துவிட்டது. 

ராகுல்காந்தி தான் தலைவராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நானும், கட்சியில் உள்ள அனைத்து தரப்பினரும் விரும்புகிறோம். இப்போது கட்சியில் சம அளவு, அனுபவம் நிறைந்த தலைவர்களும், இளம் தலைவர்களும் இருப்பது மிகவும் சாதகமான அம்சமாகும். 

சிறப்பான பணி

துணைத் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பு ஏற்று ஏராளமான பணிகளைச் செய்துள்ளார், பல விஷயங்களை சிறப்பாகக் கையாண்டுள்ளார். ஆதலால், அவரின் தலைமையை உருவாக்க சரியான நேரம் என்று கட்சியின் தலைமை நம்புகிறது.

பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டுமா? என்பது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

சிறப்பான செயல்பாடு

வாரிசு அரசியல் குறித்து பாஜனதா கட்சி, காங்கிரஸை குற்றம் சாட்டுகிறது. ஆனால், ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு தொடக்கத்தில் அரசியல் பாரம்பரியம் உதவலாம், ஆனால், அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படாத பட்சத்தில் அது அவருக்கு துணைபுரியாது.

ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவர் அரசியலில் ஈடுபட தகுதியற்றவர் எனக் கருதிவிட முடியாது. அவரின் செயல்பாட்டின் அடிப்படையில்தான் வெற்றி என்பது கிடைக்கும்.

குடும்ப பின்னணி

காந்தி என்ற ஒரு குடும்பத்தின் பின்னனி பெயரை வைத்து எதையும் மதிப்பிட முடியாது. நீங்கள் உங்கள் பணிகளின் மூலம் சிறப்பாகச் செயல்பட்டு மக்களின் நம்பிக்கை பெற்று பின் முடிவு செய்ய வேண்டும்.

சுயபரிசோதனை

வாரிசு அரசியல் குறித்து பாஜனதா கட்சி பேசும் முன், அந்த கட்சியில் உள்ள ஏராளமான தலைவர்கள் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான்என்பதை அறிய வேண்டும். முதலில் அந்த கட்சி சுயபரிசோதனை செய்வது அவசியம்.

நான் வாரிசு அரசியலை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. ஒரு தனி நபரின் திறமை, செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில்தான் வெற்றி கிடைக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.