ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்பது குறித்து தற்போதைக்கு எந்த உறுதியும் கொடுக்க முடியாது என்கிற ரீதியில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தமிழக காங்கிரஸ் தலைவர்களை கோபப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதா? வேண்டாமா? என்பதில் அக்கட்சியின் மேலிடமே குழப்பத்தில் இருக்கிறது. கூட்டணி கட்சித்தலைவர்கள் பெரும்பாலானவர்கள் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிடலாம் என்பது தான் சோனியாவின் கணக்கு. அந்த வகையில் சோனியா கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் தலைவர்கள் ராகுலை பற்றி மனதில் என்னநினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து வருகிறார்.

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெளிப்படையாகவே கூறிவிட்டது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றன. ஆனால் தி.மு.க மட்டும் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் அமைதி காத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக தி.மு.க ஏற்குமா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின், என்ன கேட்டீர்கள் என்று மீண்டும் கேட்டார். செய்தியாளரும் மறுபடியும், தி.மு.க., காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்குமாறு என்றார். இதனை கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் தான் அதைப்பற்றி முடிவெடுக்க முடியும் என்று கூறிவிட்டு புறப்பட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்த ராகுல், தனது பிரச்சாரத்தின் போது ஸ்டாலினை மிகவும் புகழ்ந்து பேசினார். இதனால் தி.மு.க ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கருதினர்.

 ஆனால் தேர்தல் சமயத்தில் தான் முடிவெடுக்கப்படும் என்கிற ஸ்டாலின் பேட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்களை கோபம் அடைய வைத்துள்ளது. தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. அப்படி இருக்கையில் காங்கிரஸ் தலைவரை பிரதமர் வேட்பாளராக ஏற்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று ஸ்டாலின் கூறியிருக்க வேண்டும் என்றே அக்கட்சியின் தலைவர்கள் கருதுகின்றனர். ஸ்டாலின் ராகுலுக்கு ஆதரவாக பேசியிருந்தால் அதனை வைத்தே தேசிய அளவிலும் பல தலைவர்களை சமாதானம் செய்திருக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.