Rahul gandhi troll Narendra modi

பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் மீது, சொத்துக்குவிப்பு புகார் உள்ள நிலையில் அதுபற்றி சில வார்த்தைகளையாவது பேசுங்கள் என்று, பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக வலியுறுத்தியுள்ளார்.

கடும் போட்டி

குஜராத் சட்டசபை தேர்தல் 184 தொகுதிகளில் டிசம்பர் 9 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் உள்ள பல்வேறு சமூக தலைவர்களை சந்தித்து கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்டு வரும் கருத்துக் கணிப்புகளில், குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்; ஆனால் வாக்கு சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்சர்தாம் கோவிலில்

22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காந்தி நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள அக்சர்தாம் கோவிலுக்கு சென்று, அங்கு வழிபட்டார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு விவகாரத்தில் மோடி அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

டீ குடித்த ராகுல்

பின்னர் சபர்கந்தாவுக்கு செல்லும் வழியில் சந்த்ரலா என்ற இடத்தில் ராகுல் காந்தி டீ குடித்தார். சாதாரண கடைக்கு சென்று அவர் டீ குடித்தபோது, அக்கடையை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். அங்கு வாக்குச் சேகரித்த ராகுல் காந்தி குழந்தைகளுடன் உரையாடினார். இதையடுத்து வல்சாத் மாவட்டம் பர்தி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது-

உண்மை வெல்லும்

இன்றைக்கு பாஜகவிடமும், மோடியிடமும்தான் எல்லாமும் உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. இதேபோன்று குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் அவர்கள் ஆட்சியில் உள்ளனர். அதிக வலிமை மிக்க கட்சியாக பாஜக உள்ளது. இருப்பினும், இங்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்; குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும். ஏனென்றால் காங்கிரசிடம்தான் உண்மை இருக்கிறது.

வேலை வாய்ப்பின்மை

எல்லாவற்றையும் பேசும் மோடி, அமித் ஷா மகன் ஜெய் ஷா மீதான புகார்கள் குறித்து ஏன் பேசுவதில்லை?. அமித் ஷா மகன் மீதான புகார் குறித்து சில வார்த்தைகளாவது மோடி பேச வேண்டும். நாம் சீன பொருளாதாரத்துடன் போட்டியிடுகிறோம். அந்நாடு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆனால் இந்தியாவில் மொத்தமே ஒரு நாளைக்கு 450 வேலை வாய்ப்புகள்தான் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பாக்ஸ்

நிர்மலாவுக்கு கருப்புக் கொடி

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள கொகாரா பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா வீடு வீடாக சென்று பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படேல் சமூகத்தை சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.