‘’தற்போதைய அரசியல் சூழல், சில தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் காரணமாக ராகுல் காந்தியின் உயிருக்கு கடுமையான ஆபத்து உள்ளது''
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானபோது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். வீர் சாவர்க்கர் குறித்த எனது பேச்சால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

புனே நீதிமன்றத்தில் வீர் சாவர்க்கருக்கு எதிரான அவதூறான பேச்சுக்காக தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான ராகுல் காந்தி தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரினார். ராகுல் காந்தி சார்பாக, வழக்கறிஞர் மிலிந்த் தத்தாத்ரயா பவார் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை அளித்தார். அதில், ‘‘புகார்தாரர் நாதுராம் கோட்சே, கோபால் கோட்சே ஆகியோரின் வழித்தோன்றல். அவரது வரலாறு வன்முறை நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. தற்போதைய அரசியல் சூழல், சில தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் காரணமாக ராகுல் காந்தியின் உயிருக்கு கடுமையான ஆபத்து உள்ளது’’ என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
‘‘புகார்தாரர் கோபால் கோட்சே, நாதுராம் கோட்சேவின் வம்சாவளி என்றும் அவர்களின் வரலாறு வன்முறை நடவடிக்கைகளுடன் தொடர்புடையது’’ என்று ராகுல் காந்தி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், ராகுல் ரவ்னீத் சிங் பிட்டு, தர்வீந்தர் சிங் மர்வா ஆகியோரையும் குறிப்பிட்டுள்ளனர்.

ராகுல் காந்தியை ‘நாட்டின் முதன்மை பயங்கரவாதி’ என்று ரவ்னீத் அழைத்திருந்தார். இது தவிர, பாஜக தலைவர் தர்வீந்தர் சிங் மர்வாவின் பெயரும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தர்வீந்தர் சிங் மர்வா ராகுல் காந்தியையும் மிரட்டி இருந்தார். ‘‘ராகுல் காந்திக்கு அவரது பாட்டியின் நிலையைப் போலவே ஏற்படும்’’ என்று தர்வீந்தர் சிங் கூறியிருந்தார். விசாரணையின் போது ராகுலுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு ராகுல் காந்தியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
