முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்திடம் ராகுல் காந்தி டியூஷன் கற்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டல் செய்துள்ளார்.

சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களையும், அவர்களின் வாராக் கடன்களை பற்றியும்  ரிசர்வ் வங்கி மூலம் தகவல் பெற்றிருந்தார். அதில், நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்டோரின் ரூ.68,607 கோடி கடன்  தள்ளுபடி செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல், இத்தகவலை  நாடாளுமன்றத்தில் வெளியிட தயங்கியது ஏன்? அந்த பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.  நாடாளுமன்றத்தில் இதனால்தான் இவ்விவகாரம் மறைக்கப்பட்டிருக்கிறது என டுவிட்டரில் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பதிலளித்து இருந்தனர். அவர் கூறுகையில் இது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதானே தவிர இது அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் நடைமுறையை கைவிடுவதாக அர்த்தமாகாது என்று விளக்கினார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராகுலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், கடன் தள்ளுபடி என்பது வேறு, வாராக்கடனை கழித்துவிட்டு கணக்கு வைத்திருப்பது என்பது வேறு. இது வங்கிகளின் வழக்கமான நடைமுறை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வந்து சேராத கடன்களை கணக்குபடி தனித்து வைப்பது என்பது வங்கி நடைமுறை. இதை பற்றியெல்லாம் ராகுலுக்கு எப்படி தெரியும். இது பற்றி முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திடம் ராகுல், டியூஷன் கற்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார்.