தாங்கள் சொல்வதுபோன்று மோடி செயல்படாவிட்டால், வலிமையான தலைவர் என்ற பிம்பத்தை அழித்துவிடுவோம் என சீனர்கள் கூறி வருகின்றனர். அதற்கு மோடி இரையாகிவிட்டார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

 இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில்..., "லடாக்கில் இந்திய எல்லையை சீனா ஆக்கிரமிக்கவில்லை என கூறுவதன் மூலம் பிரதமர் மோடி தனது பிம்பத்தைப் பாதுகாக்கிறார். அது வெறும் எல்லைத் தகராறு மட்டுமல்ல. இந்திய பிரதமர் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட வழியில் அழுத்தத்தை தருவதன் மூலம் பிரதமர் மோடியின் அடையாளத்தின் மீது சீனா தாக்குதல் நடத்தியுள்ளது. மோடி திறமையான அரசியல்வாதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவருக்கு வலிமையானவர் என்ற பிம்பம் தேவைப்படுகிறது. இதை உணர்ந்துதான் சீனர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் சொல்வதுபோன்று மோடி செயல்படாவிட்டால், வலிமையான தலைவர் என்ற பிம்பத்தை அழித்துவிடுவோம் என சீனர்கள் கூறி வருகின்றனர். அதற்கு மோடி இரையாகிவிட்டார்.

சீனர்கள் வியூகத்துடன் யோசிக்காமல் எதையும் செய்வதில்லை. தாங்கள் நினைப்பதுபோல உலகை மாற்றி அமைக்கவும், வடிவமைக்கவும், புவியை மறுகட்டமைப்பு செய்யவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். கல்வான் ஆகட்டும், டெம்சோக் ஆகட்டும் அல்லது பாங்காங் ஏரி ஆகட்டும் எங்காயினும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதே சீனர்களின் திட்டம்.எல்லையை ஒட்டி இந்தியா அமைத்துள்ள நெடுஞ்சாலையால் அவர்கள் தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அந்த நெடுஞ்சாலையை அகற்ற வேண்டும் என்பதைத்தான் சீனா விரும்புகிறது. அவர்கள் வேறு கோணத்தில் சிந்தித்தால் பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீரில் எதையாவது செய்ய நேரிடலாம் என கூறியுள்ளார்.