கேரளாவில் இம்முறை ஆளும் இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கைக்குப்பின் காங்கிரஸ் 12 இடங்களிலும், கம்யு. கூட்டணி 7 இடங்களிலும் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளரும் முன்னிலையில் இருந்தனர்.

ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தபோது, காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதியிலும் முன்னிலை வகிக்கத் துவங்கியது. மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்தது. தற்போதைய நிலவரப்படி ஆலப்புழை தொகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 

இதில் வயநாட்டில் போட்டியிடும் காங். தலைவர் ராகுல் காந்தி சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இத்தொகுதியில் மொத்தம் 12 சதவீத வாக்குகளே எண்ணப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் பெற்றுள்ளது, அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏறக்குறைய ராகுல் காந்தியின் வெற்றி உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீரென இம்முறை கேரளாவில் போட்டியிட்டார். அவர் போட்டியிட்டதும் காங்கிரசின் இத்தகைய அமோக முன்னேற்றத்திற்கு காரணம் என்ற கருத்து நிலவுகிறது.