தேசிய அரசியலை பொறுத்தவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் ஒரு குழந்தை தான் என்பதை பிரதமர் மோடியும் – பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். மேலும் ராகுலின் நாடாளுமன்ற பேச்சு அவரை தேசிய அளவில் ஒரு தலைவராக உருவகப்படுத்தியது. ஆனால் அதன் பின்னர் பேசிய மோடி, ராகுலுக்கு சரியான பதிலடி கொடுத்தார். இருந்தாலும் கூட ராகுலின் நாடாளுமன்ற பேச்சு உண்மையில் அவரின் இமேஜை ஒரு படி உயர்த்தவே செய்திருந்தது.

ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் மோடி – அமித் ஷா கூட்டணியை ராகுலால் எதிர்கொள்ள முடியாது என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னரும் கூட மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. கர்நாடகாவில் கூட காங்கிரஸ் ஆட்சியை இழந்து கூட்டணி அரசையே நடத்தி வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதுநாள் வரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் துணைத்தலைவர்களாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே அதிகம் முறை இருந்துள்ளனர். இதற்கு காரணம் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பிக்களே அதிக அளவில் இருப்பர். இந்த முறையும் கூட நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கே அதிக எம்.பிக்களே இருந்தனர்.

ஆனாலும் கூட குறைவான எம்.பிக்களை கொண்ட பா.ஜ.க கூட்டணி தான் நிறுத்திய வேட்பாளர் ஹரிவனாஸ் நாராயண் வெற்றி பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற 123 எம்.பிக்கள் ஆதரவு தேவை. ஆனால் பா.ஜ.க கூட்டணிக்கோ 87 உறுப்பினர்கள் மட்டுமே மாநிலங்களவையில் உள்ளனர். எதிர்கட்சி எம்.பி.க்களாக 158 பேர் உள்ளனர். இந்த சூழலில் காங்கிரஸ் வேட்பாளர் எளிதாக மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வென்று இருக்க முடியும். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

 இதற்கு காரணம் எதிர்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த ராகுல் காந்தி தவறியது தான் என்கிறார்கள். ஆம் ஆத்மி எம்.பி.க்களின் ஆதரவை பெற அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தொலைபேசியில் ராகுல் பேச வேண்டும் என அக்கட்சி நிபந்தனை விதித்தது. ஆனால் அந்த நிபந்தனையை ராகுல் ஏற்க மறுத்தார். இதனால் ஆம் ஆத்மி கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது.

இதே போலத்தான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், மெகபூபாவின் கட்சியும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை  இதனால் 119 எம்.பிக்களின் ஆதரவு இருந்தால் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் எதிர்கட்சி வரிசையில் இருந்த அ.தி.மு.க., உள்ளிட்ட  கட்சி எம்.பிக்களின் ஆதரவால் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெறும் 105 வாக்குகளை மட்டுமே பெற்று காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து வெற்றி பெற ராகுல் தீவிரம் காட்டாததே இதற்கு காரணம். ஆனால் அமித் ஷா – மோடி கூட்டணியோ எதிர்கட்சி வரிசையில் இருக்கும் கட்சிகளிடம் பேசி ஆதரவை பெற முடியாவிட்டாலும் கூட புறக்கணிக்க வைத்து வெற்றி பெற்றுள்ளது.