அன்று காங்கிரஸை தூய்மை செய்ய இந்திரா காந்தி காளியா அவதாரம் எடுத்தது போல இன்று ராகுல் காந்தி அவதாரம் எடுத்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்ட தலைவர் கே.எஸ் அழகிரி புழ்ந்துள்ளார். 

சுதந்திர தினம் மற்றும் காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில்,  பிரம்மாண்ட தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதற்கான நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான,சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் இன்று காலை  150 அடி உயர கொடிக்கம்பத்தில்,  பிரம்மாண்டமான தேசிய கொடியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றி வைத்து, சேவாதள தலைவர் குங்ஃபூ விஜயன் தலைமையில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.அப்போது, ராகுல்காந்தி,  புகழ் ஓங்குக என்று கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து காங்கிரஸார் கொண்டாடினர். 

விழாவில், கே‌.எஸ்‌. அழகிரி பேசியதாவது :- சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்டுள்ள 150 அடி கொடி கம்பத்தை  ராயபுரம் மனோ, திரவியம், ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.செல்வந்தர்கள், கொள்கை மறந்தவர்கள் கட்சிக்கு வந்தபோதும், இந்திரா காந்தி அன்று காளியாக அவதாரம் எடுத்து  காங்கிரஸை  தூய்மை செய்தார்.அதேபோல,  ராகுல் காந்தி அவதாரமாக வந்து இருக்கிறார். அதற்கு முதல் உதாரணம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்வு. நாட்டின் சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றது உண்டா ? தவறானவர்கள் கையில் ஆட்சி சென்றுவிட்டது. எல்லோரிடமும் நம் கொள்கையை சொல்லுங்கள், மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர், அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அனுகுண்டு ஆறுமுகம் தலைமையில்   சிலர் காங்கிரஸ் கட்சியில்  இணைந்தனர்.இந்நிகழ்வில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் இ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.டி தங்கபாலு,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: தமிழகம் கொரோனா பரவலை கேரளா மாநிலத்தை போல கட்டுபடுத்த முடியாமல் இருக்கிறது.அதனால், முதல்வர் எடப்பாடி கே .பழனிச்சாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகம் மோசமான நிலையில் உள்ளது. பாஜக எல்லோர் மீதும் மதத்தை திணிக்க வேண்டும் என்று நினைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.