rahul gandhi filed nomination for congress leader election
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான போட்டிக்காக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சோனியா காந்தி இருந்துவருகிறார். அண்மைக்காலமாக அவருக்கு உடல்நலம் குன்றி இருப்பதால், கட்சியின் முக்கிய முடிவுகளை அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்திதான் எடுத்துவருகிறார். எனவே அவரையே கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற குரலை அக்கட்சியின் நிர்வாகிகள் எழுப்பி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பை அக்கட்சியின் காரிய கமிட்டி சமீபத்தில் அறிவித்தது. இந்த தேர்தல் மூலம், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பு அதிகாரியிடம் வேட்புமனுவை ராகுல் காந்தி வழங்கினார். அவருடன் மன்மோகன் சிங் மற்றும் ஷீலா தீக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர். இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் 11-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால், டிசம்பர் 16ம் தேதி தேர்தல் நடைபெறும்.
மேலும் தேர்தல் முடிந்து அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் 19-ம் தேதி வெளியாகும். ஒருவேளை தேர்தலில் யாரும் போட்டியிடாத பட்சத்தில், ராகுல் காந்தியே தலைவராவது உறுதி செய்யப்பட்டு டிசம்பர் 11-ம் தேதியே அறிவிக்கப்படும்.
