தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தன்னுடன் கூட்டணி அமைந்துள்ள மாநில கட்சிகளுக்கு வாக்கு சேகரிப்பதர்காக தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். பாஜகவிற்கு ஆதரவாக தமிழகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவாக முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் ராகுல் காந்திக்கு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க கூடாது என்று எல்.முருகன் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் ராகுல் காந்தி தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மார்ச் 1ம் தேஎதி முளகுமூடு பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை சந்தித்து உரையாடினார். அந்த கூட்டத்தில் தேர்தல் ரீதியாக ராகுல் காந்தி பேசியதாகவும், அவை மாணவர்களை தேர்தல் ரீதியாக தூண்டும் விதமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல்படுத்திய பிறகு இப்படிப்பட்ட கூட்டங்களை நடத்திய ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இனி தமிழகத்தில் ராகுல் காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.