பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தேசிய அளவில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியிலும், காங்கிரசுக்கு எதிராக அதிருப்தி குரல்கள் அதிகரித்துள்ளன.

''காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு அரசியல் அறிவே இல்லை. பீகார் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு அவர்கள்தான் காரணம். திறமையற்ற அவர்கள் கட்சியை விட்டு தயவு செய்து அவர்கள் ஒதுங்க வேண்டும்'' என காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற குழு தலைவரும், சோனியா காந்தியின், வலது கரமாக பல ஆண்டு காலம் இருந்தவருமான மறைந்த அகமது படேலின் மகன் பைசல் படேல் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணி 202ஐ கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய மகா கூட்டணிகூட்டணி 34 இடங்களையே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை. போட்டியிட்ட 61 தொகுதிகளில், ஆறு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இந்த தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என இண்டியா கூட்டணி கட்சிகளே குற்றஞ்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் கட்சி மேலிடத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்து வருகின்றனர்.

குஜராத்தின் பரூச் தொகுதி எம்.பி-யாக காங்கிரஸ் சார்பில் மூன்று முறை போட்டியிட்டு வென்றவர் அகமது படேல். ஐந்து முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தவர். காங்கிரசில் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய அகமது படேல், சோனியாவின் அரசியல் ஆலோசகராகவும், அவரது 'வலது கரமாகவும் பல ஆண்டு காலம் இருந்தார். சோனியா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்த அகமது படேல், 2020ல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கடந்த மக்களவை வ்தேர்தலில், பரூச் தொகுதியை ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது. இதனால், அகமது படேலின் மகன் பைசல், மகள் மும்தாஜ் அதிருப்தி அடைந்தனர். இத்தொகுதியில் பா.ஜ.,விடம் ஆம் ஆத்மி தோற்றது.

மக்களவை தேர்தலுக்கு பின், 'காங்கிரசுக்கு வேலை செய்ய மாட்டேன்' என கூறிய பைசல் படேல் 'காங்கிரசில் தான் இருக்கிறேன். கட்சியை விட்டு விலகவில்லை' என, கடந்த ஆகஸ்டில் விளக்கம் அளித்தார். இந்லையில் பைசல் படேல், சமீபத்திய பீகார் தேர்தல் தோல்விக்கு ‘தோல்வியடைந்த காந்திகள்’ என ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது குற்றம் சாட்டியுள்ளார். காந்தியின் சந்ததிகளை விட 25 மடங்கு மதிப்புள்ள பிற தகுதியான தலைவர்களின் கைகளில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று பைசல் கருதுகிறார்.

இது குறித்து பைசல் படேல் மேலும் கூறுகையில், ‘‘காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. போட்டியிட்ட 61 இடங்களில் 6 இடங்களை மட்டுமே வென்றது. பீகாரில் காங்கிரஸ் ஆறு இடங்களை மட்டுமே வென்றது. அதன் மோசமான செயல்பாடுகளில் ஒன்றைச் செய்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பீகார் சட்டமன்ற முடிவுகள் உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் ராகுல், பிரியங்கா தோற்றவர்கள். தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக, 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன். ராகுல், பிரியங்காவை விட, 25 மடங்கு தகுதியான மற்றும் திறமையான நபர்கள் காங்கிரசில் இருக்கின்றனர். சசி தரூர் போன்றோரிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டிய நேரமிது. சோனியா குடும்பத்தினர் ஒதுங்கி செல்ல வேண்டும். அக்குடும்பத்தினர் எதிர்க்கட்சிக்கு, குறிப்பாக மாற்று தலைமை தேவைப்படும் ஜனநாயகத்திற்கு கெடுதல் விளைவிக்கின்றனர்.

கடந்த 2014ல், மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒருசில மாநிலங்களை தவிர, பெரும்பாலான மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பா.ஜ.கவின் வளர்ச்சி ஏறுமுகமாக உள்ள நிலையில் காங்கிரசின் நிலைமை படுமோசமாக இருக்கிறது ’’ என அவர் கூறியுள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தேசிய அளவில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியிலும், காங்கிரசுக்கு எதிராக அதிருப்தி குரல்கள் அதிகரித்துள்ளன. கூட்டணியின் தலைமை பொறுப்பை வகிக்க காங்கிரசுக்கு தகுதியில்லை என திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக குரல் கொடுத்து வருகின்றன. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் காங்கிரஸ் மேலிடம் அல்லல்பட்டு வருகிறது.