மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தம்மை வேதனைப்படுத்துவதாகவும், நம்முடைய குழந்தைகளை பாதுகாக்க, இந்திய தேசமே ஒன்று திரள வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர்  கடத்தி  சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் பலத்த காயங்களுடன் அந்த சிறுமி இந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு குற்றவாளிகளை  கைது செய்ய வேண்டும் என வலியிறுத்தி வருகின்றனர்.

பாஜக எம்எல்ஏ சுதர்சன் இந்தூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த பலாத்காரம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பகுதியைச் சேர்ந்த இர்பான் என்ற 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரின் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர். இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  தனது டுவிட்டரில் , மாண்டசூர் நகரில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு, இன்று உயிருக்குப் போராடி வருகிறார். இந்த சிறுமிக்குக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த கொடுரம் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்..

நம்முடைய குழந்தைகளைக் காக்க இந்தத் தேசமே ஒன்றுதிரள வேண்டும் என்றும் . பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி விரைவாக நீதி பெற்றுத்தர வேண்டும் என்றும் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.