இது தொடர்பாக தி இந்து நாளிதழ்  வெளியிட்டுள்ள கட்டுரையில் , முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்  அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த மோடி அரசு 36 ரஃபேல் போர் விமானங்கள் மட்டும் வாங்க ஒப்பந்தம் செய்தார்.

இந்த 36 ரஃபேல் போர் விமானங்களும் வானில் பறப்பதற்குத் தயாராக முழுத் தகுதியுடையதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரஃபேல் போர் விமானம் ஒவ்வொன்றின் விலையும் முந்தைய விலையைக் காட்டிலும் 41.42 சதவீதம் விலை  என இந்து நாளிதழ் தெரவித்துள்ளது

அதாவது ரஃபேல் போர் விமானத்தில் இந்தியாவுக்கு மட்டுமே உரிய 13 சிறப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களை இந்திய அரசு கேட்டிருந்தது. இந்த 13 அம்சங்களுடன் 36 விமானங்கள் வடிவமைக்க 130 கோடி யூரோ என்ற விலையை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்றுக்கொண்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் மிகக் குறைந்த விலையை மேற்கோள்காட்டி 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் பெற்றது.

அந்த ஒப்பந்தத்தில் 18 விமானங்கள் பறப்பதற்கு தயாரான நிலையிலும், 108 விமானங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் வகையிலும் செய்யப்பட்டது. பறக்கும் நிலையில் உள்ள ரஃபேல் விமானத்தின் விலை 79.3 மில்லியன் யூரோ என்று நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், 2011-ம் ஆண்டு விலை உயர்வை காரணம் காட்டி விமானம் ஒன்றின் விலை 100.85 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், 2016-ம் ஆண்டில் பிரான்ஸ், இந்திய அரசுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 2011-ம் ஆண்டு விலையைக் காட்டிலும் 9 சதவீதம் விலை குறைக்கப்பட்டு, விமானம் ஒன்றின் விலை 91.85 மில்லியன் யூரோவாகக் குறைக்கப்பட்டது.

ஆனால், இந்திய விமானப்படை கேட்டுத்தொண்டதற்கிணங்க, இந்தியாவுக்கு மட்டும் பிரத்யேகமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களுக்காக 140 கோடி யுரோவை டசால்ட் நிறுவனம் கேட்டது. அதன்பின் பேச்சுவார்த்தைக்குப் பின் விலை 130 கோடி யூரோவாகக் குறைக்கப்பட்டது.

இதன் மூலம் 36 ரஃபேல் போர் விமானங்களின் 13 சிறப்பு அம்சங்கள், வடிவமைப்புக்கு கடந்த 2007-ம் ஆண்டு ஒவ்வொரு விமானத்துக்கும் 11.11 மில்லியன் யூரோ என்ற நிலையில் இருந்து 2016-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 36.11 மில்லியன் யூரோவாக அதிகரித்தது.

காரணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி போட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு மட்டுமான பிரத்யேக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களுக்கான தொகை 126 விமானங்களுக்கானது, ஆனால் அதை விட சற்றே குறைக்கப்பட்ட விலையில் 36 ரபேல் விமானங்களுக்கும் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களுக்கான தொகையையும் மோடி தலைமை பாஜக அரசு ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டது  இதனால்தான் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41% அதிகரித்துள்ளது என இந்து ஆங்கில நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது..