ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில், நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை, தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். 

அதில், வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். அதுபோல மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் தன் மனுவில் கோரியிருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியானது. அப்போது மனுதாரர் அப்பாவு கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்டோபர் 4-ம் தேதி தபால் வாக்குகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்று எந்திரத்தில் பதிவான வாக்குகளை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். 

இந்நிலையில், அன்றைய தினமே மறு வாக்குப்பதிவுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கு இன்று விசாரிப்பதாக நீதிபதி ஜெயசந்திரன் அறிவித்திருந்தார். இன்று வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது இந்த விவகாரம் தொடர்பாக தாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் 3 வார காலத்திற்கு மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால், இதற்கு அப்பாவு தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இந்த வழக்கை தடை விதிக்க முடியாது என்றும், இந்த வழக்கு முழுக்க முழுக்க ஆவணங்கள் அடிப்படையில் தொடப்பட்டது என்றார். மேலும் நெல்லையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை வந்துக்கொண்டிருக்கிறது. ஆகையால் தடை விதிக்கக்கூடாது என்றும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரையின் கோரிக்கை நிராகரித்துவிட்டு திட்டமிட்டப்படி காலை 11.30 மணியளவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.