நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவின் இன்பதுரை தொடர்வாரா அல்லது திமுகவின் அப்பாவு புதிய எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்பாரா என்பதை தீர்மானிக்கும் மறுவாக்கு எண்ணிக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதற்காக தபால் வாக்குப் பெட்டி மற்றும் 34 வாக்குப் பதிவு இயந்திரங்கள் நெல்லையிலிருந்து அரசு வாகனங்கள் மூலம் நேற்று கொண்டுவரப்பட்டு, இன்று காலை அவை உயர் நீதிமன்றத்துக்கு வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டன. 

வாக்கு எண்ணும் பணிகளில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்கள் 24 பேர் ஈடுபட்டனர்.  மறுவாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஊழல் கண்காணிப்புப் பதிவாளர் சாய் சரவணன் நியமனம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் இன்பதுரை, அப்பாவு மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

2016 வாக்கு எண்ணிக்கையின்போது ராதாபுரம் தொகுதியில் 262 தபால் வாக்குகள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற்று பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கெஜட் பதிவு பெற்ற அதிகாரி இல்லை என்று இன்பதுரை தரப்பு வைத்த வாதத்தை ஏற்று 262 தபால் வாக்குகளையும் செல்லாத வாக்குகள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கெஜட் அதிகாரிகள்தான், அவர்களும் சான்றொப்பம் அளிக்கலாம் என்று தெரிவித்தது.

இதனையடுத்து, இன்றைய மறுவாக்கு எண்ணிக்கையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 262 தபால் வாக்குகளும் எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், சுமார் 230 வாக்குகள் வரை திமுக வேட்பாளர் அப்பாவுக்கே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள திமுகவினர் உற்சாகமடைந்தனர்.

2016 தேர்தலில் இன்பதுரையின் வெற்றிக்கான வாக்குகளின் வித்தியாசம் 49 தான் என்பதால், தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியவுடனேயே இன்பதுரை ஆதரவாளர்கள் சோகமாக காட்சியளித்தனர். அதே நேரத்தில் உடன்பிறப்புகள் உற்சாகத்தில் திளைப்பதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து 19,20,21 சுற்றுகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. சரியாக 6.30 மணிக்கு வாக்கு எண்ணைக்கை நிறைவு பெற்றது.