அரசியலில் இறங்கப் போவதாக என்றைக்கு ரஜினி அறிவித்தாரோ அன்றிலிருந்து பல கட்சித் தலைவர்களுக்கும் தூக்கம் போய்விட்டது. ரஜினி குறித்த அச்சம் எல்லா கட்சிகளுக்கும் இருந்தபோதிலும், திமுகவில் கொஞ்சம் பதற்றம் அதிகம். அந்தக் கட்சி நிர்வாகிகள் சந்தித்துக்கொள்ளும் போதெல்லாம் ரஜினி குறித்தே அதிகமாக பேசுகிறார்கள். நிர்வாகிகளே இப்படி இருக்கும்போது தலைமை பற்றி கேட்கவே வேண்டாம். ரஜினி பயம் அந்தளவிற்கு திமுகவை ஆட்டுவிக்கிறது.

கால் நூற்றாண்டு கால தயக்கத்தை கடாசிவிட்டு அரசியல் எண்ட்ரி கொடுக்கப் போவதாக அண்மையில் ரஜினி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானது முதல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரஜினி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை தொடர்புகொண்டு ரஜினி கட்சியில் இணைய அப்ளிகேஷன் போட்டு வருகின்றனர். இவர்களின் பின்னணி பற்றி ரஜினி சார்பில் ஒரு ஸ்பெஷல் டீம் அலசி ஆராய்ந்து வருகிறது. இதில் ஓகே ஆனவர்களை தொடர்புகொள்ளும் ரஜினி தரப்பு, ’’கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. முறைப்படி கட்சி தொடங்கியதும் அழைப்பு வரும். அப்போது சேர்ந்துகொள்ளுங்கள்’’ என சொல்லி வருகிறதாம்.

ரஜினி கட்சியில் சேர விண்ணப்பம் செய்பவர்களில் திமுக பிரமுகர்கள்தான் அதிகம் என்கிற தகவல் அந்தக் கட்சித் தலைமையை உலுக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து செயல்பட முடியாமல் வேறு வழியின்றி திமுகவில் ஒட்டிக் கொண்டிருக்கும் கணிசமான பேர் ரஜினி கட்சிக்குத் தாவ தயாராகி வருகின்றனர். இவர்களையெல்லாம் தொடர்புகொண்டு ஒருங்கிணைக்கும் பணியை மு.க.அழகிரி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. வடக்கே முல்லைவேந்தன் தொடங்கி தெற்கே மாலைராஜா வரை ஒரு நீண்ட பட்டியலே அழகிரியிடம் இருக்கிறதாம்.

மு.க.அழகிரியின் இந்த அதிரடிக்குப் போட்டியாக ஸ்டாலின் தரப்பு சம்மந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு, ‘’அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அடுத்து நம்முடைய ஆட்சிதான். அப்போது உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது’’என ஆசை வார்த்தைகளை கூறி வருகிறதாம். சில முக்கிய பிரமுகர்களை ஸ்டாலினே தொடர்புகொண்டு நேரடியாக பேசி வருவதாகவும் சொல்கிறார்கள்.

அணிமாறும் பட்டியலில் வீரபாண்டி ராஜா இருப்பது ஸ்டாலினுக்கு தெரிந்திருக்கிறது. இதனால்தான் அண்மையில் சேலம் சென்றிருந்த அவர் சம்மந்தமே இல்லாத வகையில் வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். ’இது சமாதான முயற்சியின் ஒரு அங்கமே’ என்கிறார்கள் ராஜா தரப்பினர். ரஜினி எபெக்டால் சொந்தக் கட்சியினரிடம் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரிடமும் அன்பை பொழிகிறாராம் ஸ்டாலின். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொரொனாவால் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து உடனடியாக அவரை தொடர்புகொண்டு உருக்கமாக பேசியதை கதர்ச் சட்டைகள் கள்ளச் சிரிப்புடன் ரசிக்கிறார்கள்.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்காக அறிவாலயம் வரும் பிற கட்சித் தலைவர்களை ஒப்புக்கு வரவேற்கும் ஸ்டாலின் இப்போது வாண்டட் ஆக போன் போட்டு அவர்களிடம்  குசலம் விசாரிக்கிறாராம். ’’எல்லாம் பதவி (முதல்வர்) படுத்தும் பாடு’’ என்கிறார்கள்.