சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் வேகமாக வளர்ந்து வருவதோடு, சர்வதேச மன்றங்களிலும் குரல் எழுப்புகின்றன. பல துருவ உலக ஒழுங்கு என்பது உலகளாவிய முடிவுகளை ஒரு நாடு மட்டும் எடுக்காமல், பல வலுவான நாடுகளால் எடுக்கப்பட வேண்டும்
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்புப் போருக்கு இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியா, சீனா குறுத்து அமெரிக்காவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பல துருவ உலக ஒழுங்குக்கான அவசியத்தை புதின் மீண்டும் வலியுறுத்தினார்.
சீனாவிற்கு தனது நான்கு நாள் பயணத்தை முடித்த பின்னர், இந்தியா- சீனா போன்ற பெரிய பொருளாதாரங்களின் வளர்ந்து வரும் வேகத்தை புறக்கணிக்க முடியாது.இப்போது எந்த நாடும் உலகின் அரசியலிலோ, பாதுகாப்பிலோ ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்கிற நேரம் வந்துவிட்டது.
இந்தியா - சீனா போன்ற பொருளாதார ஜாம்பவான்கள் உள்ளனர். வாங்கும் சக்தி சமநிலைப்படி நமது பொருளாதாரமும், முதல் 4 இடங்களில் உள்ளது. ஆனால், இது எந்த ஒரு நாடும், அரசியலிலோ அல்லது பாதுகாப்பிலோ ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. அனைவரும் சமமாக இருக்க வேண்டும். ஒற்றை துருவ உலக மாதிரி பழையது. அது அநீதியானது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பல துருவ உலகம், பழைய ஏகாதிபத்திய கட்டமைப்பை உருவாக்காது. எந்த புதிய ஆதிக்க சக்தியும் உருவாக்கப்படாது என்பதை புடின் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கு உதாரணங்களாக பிரிக்ஸ், எஸ்சிஓ போன்ற அமைப்புகளை மேற்கோள் காட்டி, அனைத்து நாடுகளும் இங்கு சமமாக பங்கேற்கின்றன என்றும் கூறினார். பனிப்போருக்குப் பிறகு, அமெரிக்கா உலக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்தது. இந்தக் காலகட்டம் ஒற்றை துருவ உலக ஒழுங்கு என்று அழைக்கப்பட்டது. அங்கு ஒரே ஒரு வல்லரசு மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் வேகமாக வளர்ந்து வருவதோடு, சர்வதேச மன்றங்களிலும் குரல் எழுப்புகின்றன. பல துருவ உலக ஒழுங்கு என்பது உலகளாவிய முடிவுகளை ஒரு நாடு மட்டும் எடுக்காமல், பல வலுவான நாடுகள், குழுக்களால் எடுக்கப்பட வேண்டும் என்பதாகும். பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்றவை இந்த சிந்தனையின் பிரதிபலிப்பாகும். அங்கு உறுப்பு நாடுகள் சமமான பங்கேற்பைப் பற்றி பேசுகின்றன. எளிமையாக சொல்ல வேண்டுமானால், பல துருவ உலகம் என்பது ஒரு சர்வதேச அமைப்பு. அங்கு ஒற்றை முதலாளி இல்லை. ஆனால் பல நாடுகளின் வலிமையும் நலன்களும் ஒன்றாக உலகளாவிய அரசியல், பாதுகாப்பின் சமநிலையை தீர்மானிக்கின்றன.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம். இந்தியா மேற்கு நாடுகளுடனும், ரஷ்யா, சீனாவுடனும் உறவுகளைக் கொண்டுள்ளது. சீனா - அமெரிக்காவுடன் போட்டியிடும் ஒரு பொருளாதாரம், தொழில்நுட்ப சக்தி. டிரம்ப் வரிகளை விதிப்பதன் மூலம் சீனாவை அடிபணிய வைக்க முயன்றார், ஆனால் அது நடக்கவில்லை. ரஷ்யா - இராணுவ சக்தி, எரிசக்தி வளங்கள் மூலம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரேசில் - லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம். பிரிக்ஸின் முக்கிய நாடு. தென்னாப்பிரிக்கா - ஆப்பிரிக்காவில் அரசியல், பொருளாதார தலைமையாக இருக்கிறது.
பல துருவ உலக ஒழுங்கை ஊக்குவிக்கும் சில பெரிய நாடுகளும் உள்ளன. பிரிக்ஸில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள்) போன்றவை. மூன்றாவதாக, ஜி20. இது ஒரு உலகளாவிய தளமாக இருந்தாலும், அதில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் அமெரிக்க ஐரோப்பிய ஆதிக்கத்தை சமநிலைப்படுத்துகின்றன. இது தவிர, இந்தோனேசியா, சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளும் பெரும்பாலும் பல துருவ உலகத்தை ஆதரிக்கின்றன. ஏனென்றால் அவை அமெரிக்கா, மேற்கு நாடுகள் மட்டுமே விதிகளை அமைக்க விரும்பவில்லை.
