புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக அதன் நிர்வாகத்தின் மீதும் இயக்குநர் அமீர் மீதும் கோவை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா? அரசியல் காரணங்களுக்கா? என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் கடந்த வெள்ளி அன்று கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர். ஆடிட்டோரியத்தில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் ஒருங்கிணைந்தார்.

வட்டமேசை விவாத நிகழ்ச்சியில்,  டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழிசை சௌந்தரராஜன், கே.பாலகிருஷ்ணன், செம்மலை, தமாகா ஞானதேசிகன், தனியரசு, செ.கு.தமிழரசன் உள்ளிட்ட தலைவர்களும் இயக்குநர் அமீரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், இயக்குநர் அமீர் சில கருத்துக்களை முன்வைத்தார். அவரது கருத்துக்கு பாஜகவினர் மற்றும் ஆதரவு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. 

நிகழ்ச்சியைத் தொடர முடியாதபடி மேடையை நோக்கி பாஜகவினர் முன்னேறினர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினரும் மறறவர்களும் மிகுந்த சிரமப்பட்டு அவர்களைத் தடுத்து நிறுததினர். 45 நிமிஷங்களுக்குமேல் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் பாஜகவினர் தடுத்த நிலையில், வட்டமேசை விவாத நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை நிர்வாகத்தின் மீதும், கோவை பகுதி செய்தியாளர் சுரேஷ்குமார் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படுதல், இரு பிரிவினரிடையே பிரச்சனையை ஏற்படுத்துதல், சொத்துக்களுக்கு சேதம் ஆகிய பிரிவுகளின்கீழ் கோவை பீளமேடு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் சென்ற எம்.எல்.ஏ. தனியரசின் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய தலைமை தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று பல்வேறு கட்சி தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.