புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மருத்துவமனைக்கு முடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையைத் தொடர்ந்து உள் மாவட்டங்களிலும், கிராம புறங்களிலும் கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. கோவையில் 428 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 249 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்களது மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சொந்தமான சங்கீதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குத் தலைமை மருத்துவராக அவரது மனைவி உள்ளார்.

சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அவர் வசித்து வந்த திருவள்ளுவர் நகர் தெருவிற்கும் சீல் வைத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும், அவரது குடும்பத்தினர் உட்பட அப்பகுதியில் இருப்பவர்கள் வசிக்கும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.