இளம்பெண்களை வீட்டுக்குள் வைத்து அடைத்து மிரட்டிய பிரபல நாடுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை போலீசார் எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

சென்னை, அண்ணாமலைபுரத்தில்  வசித்து வருகிறார் புஷ்பவனம் குப்புசாமி. அபிராமபுரத்தை சேர்ந்த 17 மற்றும்18 வயதுடைய அக்கா, தங்கைகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்புசாமி வீட்டு வேலைகள் செய்ய சேர்ந்துள்ளனர்.

மாதம் சம்பளம் 8 ஆயிரம் என்றும், ஞாயிற்றுக்கிழமை வேலை செய்தால் 300 ரூபாய் தனியாக தருகிறேன் என்றும் குப்புசாமி சொன்னதால், நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று குப்புசாமி வீட்டில் சகோதரிகள் வேலை செய்துள்ளனர். வேலை முடிந்து செல்லும்போது 200 ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளார். மீதம் 100 ரூபாய் கேட்டபோது, அதெல்லாம் கிடையாது என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இதை தாய் ஜெயந்தியிடம் அப்பெண்கள் சொல்ல, அவர் அக்கம்பக்கத்தில் சொல்லி குறைபட்டிருக்கிறார். இந்த விவகாரம் குப்புசாமிக்கு தெரிந்து ஆத்திரப்பட்டிருக்கிறார். இதனால், நேற்று வேலைக்கு வந்த சகோதரிகளை, எப்படி என்னைப்பற்றி வெளியில் பேசலாம் என்று சத்தம்போட்டு கதவை பூட்டி, வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறார்.

வழக்கமாக வீட்டுக்கு வரும் நேரத்தில் மகள்கள் வராததால் குப்புசாமிக்கு ஜெயந்தி போன்போட, கோபமாக பேசிவிட்டு போனை வைத்துவிட்டாராம். இதனால் பயந்துபோன ஜெயந்தி, புஷ்பவனம் குப்புசாமி வீட்டுக்கு ஓடியிருக்கிறார். அங்கே தன் மகள்கள் அடைபட்டிருப்பதை கண்டு பயந்துபோன ஜெயந்தி, அபிராமபுரம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இரு தரப்பினரையும் அழைத்துப்பேசிய போலீசார், இனி இப்படி செய்யக்கூடாது என்று புஷ்பவனம் குப்புசாமியை எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையக கொண்டிருக்கிறார் புஷ்பவனம் குப்புசாமி.