பஞ்சாப் மாநிலத்தில் இப்போது சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
பஞ்சாப்பில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ் :
இதனிடையே தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அதில் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பாலும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகள் :
தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் வெறும் 22 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அகாலி தளம் கட்சி மொத்தம் இருக்கும் 117 இடங்களில் 19 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 5 இடங்களிலும் இதர மற்றும் சுயேச்சைகள் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

திடீர் திருப்பம் :
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்று மாலை புதுடெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அவர், 'அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் அளித்த தீர்ப்பு வரும் 10 ஆம் தேதி தெரிந்துவிடும். மக்களின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என தெரிவித்தார். தேர்தல் முடிந்த நிலையில் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்றா ? அல்லது அரசியல் காரணமான ஒன்றா ? என பல்வேறு கேள்விகள் எழுந்து இருக்கிறது.
