சசிகலா பற்றி தொடர்ந்து பேசி வரும், டிஐஜி ரூபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் டிஐஜி ரூபா தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பான புகைப்படம், வீடியோ கட்சிகளை உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டிஐஜி ரூபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக சிறைத்துறை டிஐஜி பொறுப்பில் இருந்து ரூபா நீக்கப்பட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கமி‌ஷனராக நியமிக்கப்பட்ட பிறகும் அவருக்கு சம்பந்தம் இல்லாத வி‌ஷயம் குறித்து அவர் பேசுகிறார். அவர் சசிகலாவுக்கும், கர்நாடக அரசின் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும் தொடர்ந்து பேசியும், பேட்டி அளித்தும் வருகிறார்.

டிஐஜி ரூபா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், அவர் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.

ஒரு போலீஸ் உயர் அதிகாரி விளம்பரத்துக்காக பேட்டி அளிப்பது தவறானது. தான் கூறி வருவதற்கு ஆதாரம் இருப்பதாகவும் பேசி வருகிறார். அவர் ஆதாரத்தை வெளியிடாமல் பத்திரிகைகளில் விளம்பரம் தேடுகிறார்.

அவர் தொடர்ந்து பேசுவதற்கு அரசு அனுமதிக்கக்கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வரின் தனிப்பிரிவு, போலீஸ் டிஜிபி, உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் புகார் மனு அனுப்பி உள்ளேன்.

கர்நாடக சிறைத்துறை விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் உயர்மட்டக்குழுவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமாரை சந்தித்து இன்று புகார் மனு கொடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.