சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு மோசமான ஊழல் ஆட்சி நிர்வாகமே காரணம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்துவருகிறார்கள். குறிப்பாக சென்னையில் தண்ணீருக்காக அதிக செலவு செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை குடிநீர்ப் பற்றாக்குறை இந்தியாவைத் தாண்டி உலக அளவிலும் பேசுபொருளாகிவிட்டது. இந்நிலையில் சென்னை குடிநீர் தட்டுப்பாடு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.


அதில், “இந்தியாவின்  நான்காவது பெரிய நகரம் சென்னை. ஆனால், தற்போது வறட்சியில் முதல் நகரமாகி உள்ளது. இதே சென்னை நகரம்தான் 2015-ல் கடும் மழையால், வெள்ளத்தில் தத்தளித்து மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது. சென்னையின் தற்போதைய பிரச்னைக்கு தமிழகத்தின் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சியபோக்கு ஆகியவையே காரணம். பொதுமக்களின் சுயநல எண்ணமும் ஒரு காரணமாக கூறலாம். புதுச்சேரியிலும் இதுபோன்ற ஒரு நிலை ஏற்படாமல் இருக்க  மக்களை தயார் செய்ய வேண்டும்.


புதுச்சேரியை பசுமையான பகுதியாக மாற்ற, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செய்த வேலையால் வறட்சியிலிருந்து சற்று தப்பியிருக்கிறோம். இந்தக் கூட்டு முயற்சி எப்போதும் தேவை. எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் தேவை. நாம் அனைவரும் தொடர்ந்து மேற்கொள்ளும் ‘பசுமை புதுச்சேரி இயக்கம்' மூலம் சென்னையைப் போல வறட்சி ஏற்படாமல், புதுச்சேரியைக் காப்பாற்ற உதவும்” என்று தெரிவித்துள்ளார். 
சென்னை வறட்சிக்கு தமிழகத்தில் மோசமான ஊழல் ஆட்சியே காரணம் என்று கிரண்பேடி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.