புதுச்சேரியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திப்போம். புதுச்சேரியில் திமுக ஆட்சியை அமைப்போம் என்று புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்.எல்.ஏ.க்களும் ட் திமுகவுக்கு 3 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். மெஜாரிடிக்கு 16 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் அரசை வெளியிலிருந்து திமுக ஆதரித்துவருகிறது. புதுச்சேரியில் கடைசியாக 1996-ல் திமுக ஆட்சி அமைத்தது. அதன் பிறகு அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் மட்டுமே ஆட்சி அமைத்துவருகின்றன. இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் எதிரொலி புதுச்சேரியிலும் எழத் தொடங்கியிருக்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை புதுச்சேரி யூனியன் திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தையொட்டி புதுச்சேரியில் நடந்த விழாவில் புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா பேசுகையில் இதைத் தெரிவித்துள்ளார். “மாநிலத்தின் அடிப்படை பிரச்னைகள், மக்களை பாதிக்கும் பிரச்னைகள், திமுகவின் கொள்கையைப் பாதிக்கும் பிரச்னைகளை எதிர்த்து புதுச்சேரியில் போராட கட்சித் தலைமை அனுமதி வழங்கியுள்ளது.


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்பதில் புதுவையில் உள்ள மூன்று திமுக அமைப்பாளர்களும் உறுதியாக இருக்கிறோம். வரும் காலம் புதுச்சேரியில் திமுகவின் காலமாகும். புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளாக திமுக, ஆட்சியில் இல்லை. என்றாலும், இங்கே திமுக அழிந்துபோய்விடவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திப்போம். புதுச்சேரியில் திமுக ஆட்சியை அமைப்போம்.” என்று சிவா பேசினார்.