காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு வரும் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளது. 

காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கால அவகாசம் முடியும் வரையுமே மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் முக்கிய இடங்களில் எல்லாம் திட்டம் (Scheme) என்றே கூறியுள்ளதாகவும் இதற்கு விளக்கம் காணவே மத்திய அரசு முயற்சி எடுத்து வருதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி   மனுத்தாக்கல் செய்துள்ளது.  

இந்நிலையில், தமிழக அரசை தொடர்ந்து வரும் 2 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.