காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிவிட்டது. இந்தியாவில் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு கிடையாது என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்தது. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் மிக அதிகமாக உள்ளனர். ஆனால், அவர்களுக்கு இட ஒதுக்கீட்டைத் தராமல் புறக்கணித்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தோம்.
1986-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதல் படியும் 2015-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு சலோனி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்ற அறிவுரையின்படியும் அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் மத்தியத் தொகுப்பில் உள்ள மருத்துவப் பட்டப்படிப்பு, மேல்படிப்பு, எம்டி, எம்எஸ், பல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் 27 சதவீத இட ஒதுக்கீட்டைப் பிரதமர் வழங்கியுள்ளார். 
இதன் மூலம் மருத்துவக் கல்வியில் 5,500 ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே இடம் கிடைக்கும். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது அவர்களுடைய இயலாமைதான் காரணம். செல்போன் ஒட்டுக் கேட்டதன் மூலம் ஆட்சி கவிழ்ந்தது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுவதெல்லாம் ஏற்புடையது அல்ல. செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டது என்று கூறும் நாராயணசாமி, அதை நிரூபிக்கத் தயாரா என கேட்க விரும்புகிறேன்.
ஒவ்வொரு நாளும் காங்கிரஸின் செல்வாக்கும் வாக்கு வங்கியும் நாளுக்கு நாள் சரிந்துவருகிறது. இந்தியாவில் இனி ஒருபோதும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிவிட்டது. இந்தியாவில் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு கிடையாது. ஒருவேளை இத்தாலிக்கு வேண்டுமானால் ராகுல் பிரதமராகலாம்" என்று சுவாமிநாதன் தெரிவித்தார்.