பாஜக மாநில துணை தலைவராக இருந்த அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என்கிற எதார்த்தை பேசினேன். அதற்காக கடந்த இரண்டு மூன்று நாட்களாக பச்சை பச்சையாக கேட்கக்கூடாத கேள்வி எல்லாம் என்னைக் கேட்டு  அசிங்கப்படுத்தினார்கள். அதையெல்லாம் கேட்க வேண்டிய சூழலை எண்ணி மனம் சோர்ந்திருந்த நேரத்தில் மு.க.ஸ்டாலினின் அன்பில் அடிப்படையிலும், முன்னாள் அமைச்சர் ரகுபதி, பெரியண்ணன், உள்ளிட்ட புதுக்கோட்டை திமுகவினர், இதற்கு மேலும் நீங்கள் பொறுத்திருக்க வேண்டாம்.  

நீங்கள் இணைய வேண்டிய இடம் , இணைய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என அழைத்தார்கள். அதன் அடிப்படையில் திமுகவில் மன நிறைவோடு இணைந்தேன். இன்னும் ஒரு சில மாதங்களில் ஏமாற்றத்தில் இருந்து மாற்றத்தை நோக்கி ஸ்டாலின் தலைமையில் திமுகவின் நல்லாட்சி அமைய இன்று முதல் எனது பயணம் தொடரும் என்பதை நான் பதிவு செய்கிறேன்.

பாஜக பற்றி நான் இங்கே விமர்சிக்கவில்லை. பிரதமர் மோடியையோ, தேசிய தலைமையையோ நான் குறைகூற விரும்பவில்லை. தமிழகத்தில் ஒருசிலரை தவிர பாஜகவை வெளியே கொண்டு செல்ல மாட்டார்கள். வளர்வதற்கு தடையாக இருப்பார்கள்.  மற்றவர்கள் என்னைப்போன்றவர்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு மற்ற பாஜகவினர் முடிவுகளை எடுப்பார்கள்.

 

என்னை ஏற்றுக்கொண்டவர்கள், என்னோடு தொடர்பில் இருப்பவர்கள், என்னோடு அங்கு இணைந்தவர்கள் கால சூழல் கருதி சுயநினைவோடு நல்ல முடிவெடுப்பார்கள்.  திமுக எப்படி பிடித்திருக்கிறது என்று கேட்பது, தேன் எப்படி சுவைக்கிறது என்று கேட்பதையும் சமமாக பார்க்கிறேன். 

திமுகவில் இலக்கிய அணியில் இருந்தேன். அதனை தலைவர் அவர்கள் இலக்கிய அணியை கலக்கிய அணியாக மாற்றியவர் என தலைவர் நாவினால் புகழப்பட்டவன். பாஜகவில் இருந்த புல்லுருவிகள் என்னால் அவர்களது வளர்ச்சி தடைபடும் என நினைத்தவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள்’’ எனத் தெரிவித்தார்.