Asianet News TamilAsianet News Tamil

கொரோனா கைமீறிப் போய்விட்டதாக அரசு கூறுகிறது.. உடனே கூடுதல் தடுப்பூசி வேண்டும்.. பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்.!

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மனித உயிர்களைக் காப்பாற்ற ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திராமல், மாநிலங்களே சுதந்திரமாக மருந்துகளையும் தடுப்பூசிகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டியதும் முக்கியமாகிறது. 

provide additional vaccination... MK Stalin letter to the PM modi
Author
Tamil Nadu, First Published Apr 18, 2021, 1:50 PM IST

கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில்;- கொரோனா தொற்றுப் பரவல் கடந்த 7 நாட்களில் விரைவாக அதிகரித்து வருவதையும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்திருப்பதையும் தாங்கள் அறிந்திருக்கக் கூடும். 2021 ஏப்ரல் 17 ஆம் தேதியன்று வெளியான அதிகாரபூர்வத் தகவலில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 61,593 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆகவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டுள்ள போதிலும், நிலைமை கைமீறிப் போய்விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞரே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு சூழல் உள்ளது.

provide additional vaccination... MK Stalin letter to the PM modi

தாங்கள் அறிந்திருப்பதைப் போலவே, சமூக இடைவெளி, சுகாதாரமாக இருப்பது, முகக் கவசம் அணிவது இவைதவிர, தடுப்பு மருந்துகள் செலுத்துதலே மருத்துவப் பாதுகாப்பாகும். மேலும், தடுப்பூசி மருந்து மட்டுமே உலகளாவிய இந்தப் பெருந்தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காப்பதற்கு தற்போது கிடைக்கக் கூடிய ஓரே சிறந்த சாதனம் ஆகும். அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு இன்னும் எடுக்காத நிலையில். முன்னுரிமை தரப்பட்டுள்ள பிரிவினர் மட்டுமே, தற்போது தடுப்பூசியைப் பெற முடிகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, முதலில் தடுப்பூசியைப் பெறும் குழுவினர் மருத்துவத்துறையினரும் முன்களப்பணியாளர்களும்தான். இரண்டாவது குழுவினர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 முதல் 59 வயது வரையிலும்தான். அதிலும், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால், பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்படுகிறது.

provide additional vaccination... MK Stalin letter to the PM modi

தடுப்பூசி செலுத்தும் பணியில், இத்தகைய கட்டுப்பாடுகளையும், முன்னுரிமைகளையும் வைத்துக் கொண்டு, இந்திய அரசால் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள தேவையான நபர்களுக்குக் கூட தடுப்பூசி செலுத்துவது மிகவும் சாத்தியற்றது. தமிழ்நாட்டில், வெறும் 46.70 லட்சம் பேர்களுக்குத்தான் இதுநாள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 40.64 லட்சம் பேருக்கு முதல் முறையும், 6.05 லட்சம் பேருக்கு இரண்டாவது முறையும் தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை மிக அதிக அளவில் இருப்பதுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள், தடுப்பு மருந்துகள் பற்றாக்குறையால் திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வருகின்றன. தற்போதைய வழிகாட்டுதலின் படியே, மத்திய அரசிடமிருந்து 20 லட்சம் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை வழங்குமாறு, மத்திய அரசிடம், மாநில அரசு ஏற்கனவே கேட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

provide additional vaccination... MK Stalin letter to the PM modi

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பெருந்தொற்றின் கொடிய விளைவுகளிலிருந்து மனித உயிர்களைக் காக்க அனைவருக்கும் தடுப்பூசி என்பது காலத்தின் தேவையாகிறது. இந்தச் சூழ்நிலையில், பயனுள்ள தடுப்பூசியைச் செலுத்தும் பணியை நிறைவேற்றவும், நோய்த்தொற்றின் சுழற்சியை உடைக்கவும், நோய்ப் பாதிப்பைக் குறைக்கவும், தமிழகத்திற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதைவிட அதிகமான தடுப்பூசிகள் தேவைப்படும். தமிழ்நாடு ஒருபுறம் தடுப்பூசிப் பற்றாக்குறையால் தவிப்பதுடன், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தேவைப்படும் நபர்களுக்குக் கூட தடுப்பூசியைச் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

எனவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, மாநில அரசால் கேட்கப்பட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்புவதுடன், தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை அதிக அளவு வழங்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

provide additional vaccination... MK Stalin letter to the PM modi

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மனித உயிர்களைக் காப்பாற்ற ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திராமல், மாநிலங்களே சுதந்திரமாக மருந்துகளையும் தடுப்பூசிகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டியதும் முக்கியமாகிறது. சர்வதேச நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதிலும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தித் தந்து, பெருந்தொற்றை சுதந்திரமாகச் சமாளிக்க விடுவதில் மத்திய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. எனவே நேரடி கொள்முதல் செய்வதற்கு மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி, கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான உணர்வில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை விரைவாக எடுத்து, தற்போதைய கொரோனா பெருந்தொற்று சூழலிலிருந்து தமிழகம் மீள உதவுமாறும், இந்தக் கொடிய கொரோனா பேரழிவிலிருந்து மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கிடுமாறும் தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios