மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகிற 12-ந்தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று முத்தரசன் அதிரடியாக அறிவித்துள்ளார். 


வேளாண் பாதுகாப்பு சட்டங்கள் எதிர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அண்மையில் நடைபெற்று வரக்கூடிய சம்பங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. நாடு தவறான பாதைக்கு போய்விடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த தீர்ப்பு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை கேள்விக்குறியாக்குகிறது. நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறி வருகிறது.

விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரானசட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு மாநில அரசு துணை போயுள்ளது. இந்த சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வருகிற 12-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் தலைநகரங்களில் உள்ள மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும்.

மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி வருகிறது. அ.தி.மு.க.வின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்து பிரதமர் மோடி தான் தீர்மானிக்கிறார். அ.தி.மு.க.வின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது அக்கட்சியின் உட்கட்சி பிரச்சினை.தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் தேர்தலை சந்தித்து, வெற்றி பெறுவோம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆதி திராவிடர் பெண்களுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு உள்ள உரத்தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் திட்டம் போல், ஒரே நாடு, ஒரே கட்சி என மாற்றுவதற்கு பா.ஜ.க. முயன்று வருகிறது என குற்றம் சாட்டினார்.