11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அதிரடி உத்தரவு ஒன்றை தமிழக பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

11,12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் மிகப்பெரும் மாற்றத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் இருக்கக்கூடிய 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைக்கப்பட்டது. தலா 100 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 500 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது. இந்த நடைமுறை 2020-2021 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ஆம் வகுப்பு விடுப்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகை அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டு 10ஆம் வகுப்பு மாணவர், மாணவிகள் தேர்ச்சி அளிக்கப்படுவர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், 11ஆம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வு எழுதிய பாடங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். 12ஆம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 11ஆம் வகுப்பில் புதிதாக அமலுக்கு வந்துள்ள புதிய பாடத் திட்ட தொகுப்புக்கு அதாவது பாடங்கள் 5 பாடங்களாக குறைக்கப்பட்டு, 500 மதிப்பெண்களாக கணக்கிடும் முறைக்கு முதன்மை கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.