Prof.Nirmala Devi told she did the work past 10 years
கல்லூரி மாணவிகளை பாலியலில் தொழிலில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் நிர்மலா தேவி, கடந்த 10 ஆண்டுகளாக இதே வேலையைச் செய்து வந்ததாக திடுக் தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த மாதம் 4 மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான வழியில் அழைத்துச்செல்ல முயன்றதாக வெளியான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து அவர் அருப்புக்கோட்டை போலீஸாரால் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
தொடக்கத்தில் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை சொல்லியிருக்கிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரண்டு துறை தலைவர்கள் இதில் தொடர்புடையவர்கள் என நிர்மலா தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் அதிகாலை 2 மணி வரை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வந்தனர். இவர்களின் தொடர் டார்ச்சரால் ஒரு கட்டத்தில் எரிச்சலான பேராசிரியை நிர்மலா தேவி, 10 வருஷமா நடந்திட்டு வரும் கதையை ஒரே நாள் இரவில் எப்படி சொல்ல முடியும் ? என எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் சில நிமிடங்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

இந்நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றிவரும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தேவாங்கர் கலைக்கல்லூரில் இதற்கு முன் நிர்வாகப் பொறுப்பில் இருந்த சிலரும் இப்பிரச்சனையில் சிக்குவார்கள் என தெரிகிறது.
