கடைசி வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்கிற நம்பிக்கையிலேயே இருந்த திமுக தலைமை தேர்தல் நடைபெறுவது உறுதி என்று ஆன பிறகு கூட பெரிய அளவில் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கூட்டணி குறித்து பேசக் கூட வைகோ அண்ணா அறிவாலயம் வரவில்லை என்கிறார்கள். அதாவது அனைத்தையும் மாவட்டச் செயலாளர்களுடன் பேசி முடித்துக் கொள்ளுமாறு திமுக தலைமை கூட்டணி கட்சிகளுக்கு தகவல் அனுப்பிவிட்டது. இதனை அடுத்து காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர்களை சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் ஓரளவு எதிர்பார்த்த இடங்கள் கிடைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் மதிமுகவிற்கு வட மாவட்டத்தில் பெரிய அளவில் இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது-

இதே போல் இடதுசாரிக் கட்சிகளுக்கும் திமுக கூட்டணியில் பெரும்பாலான மாவட்டங்களில் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதற்கு காரணம் மாவட்டச் செயலாளர் துரை சந்திரசேகரன் தான் என வெளிப்படையாகவே அந்த கட்சி குற்றஞ்சாட்டியது. இதே போல் கன்னியாகுமரியில் திமுக வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு உதாரணம் தான் என்கிறார்கள். இதே போல் பெரும்பாலான  மாவட்டங்களில் மதிமுக வேட்பாளர்களும் தனியாக களம் இறங்கியுள்ளதாகவும் அதனை அக்கட்சி தலைமை கண்டு கொள்ளவில்லை என்றும், திமுகவும் பெரிதுபடுத்தவில்லை என்றும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் திமுக உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை சதவீதம் என்று எந்த முடிவும் எடுக்காதது தான் என்றும் பேசப்படுகிறது.

அதே சமயம் அதிமுக கூட்டணியில் ஒரு சில இடங்களில் பிரச்சனை இருந்தாலும் பாமக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிகளுக்கு கணிசமான அளவில் இடங்களை பெற்றுக் கொண்டதாகவும் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தாரளமாக நடந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள்.