பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதையடுத்து அங்கு நடைபெறும் சம்பவங்களை ரவுடிகள் சிலர் வீடியோ எடுத்து விலைக்கு விற்பனை செய்வதாக  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அம்பலப்படுத்திய கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது குற்றம் சாட்டினார். 

சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

இதனிடையே சசிகலா விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பாரதீய ஜனதா புகார் அளித்து இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு அக்கட்சி வற்புறுத்தி உள்ளது.

இதற்கிடையே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சசிகலாவின் விருந்தினர் மாளிகையாக மாறியது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறையில் சசிகலா சீருடை அணியாமல் நைட்டி அணிந்துகொண்டு நடமாடும் காட்சிகள் பதிவாகிய 2 நிமிட வீடியோவை ரூ.2 லட்சம் கொடுத்து ஒரு கன்னட சேனல் வாங்கி ஒளிபரப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பெங்களூர் சிறையில் இருக்கும் முக்கிய தாதாக்கள், அவர்களின் அடியாட்கள் நடுவே கோஷ்டி பூசல் உள்ளதாகவும் இதன் காரணமாக சிறையில் நடைபெறும் சம்பவங்கள்  வீடியோக்கள் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சிறையில் அடியாட்கள் எடுக்கும் வீடியோக்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அண்மையில்  வெளியான  வீடியோவில் சசிகலா மற்றும் இளவரசி ஷாப்பிங் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது, இந்த வீடியோவுக்கு விலை ரூ.10 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.