இனி கேரள சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு உறுப்புகளை தானம் செய்ய அனுமதி வழங்குவது என அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவின் கண்ணூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் சுகுமாறன். இவர் தனது சிறுநீரகத்தில் ஒன்றை நோயாளி ஒருவருக்கு நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார். ஆனால் அது தொடர்பான உரிய அனுமதி கிடைப்பதற்கு முன்பாகவே குறிப்பிட்ட நோயாளி இறந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விவாதிக்க கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வியாழனன்று நடந்தது. இதில் கேரள மாநில சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறுப்புகளை தானமாக அளிக்க அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவையாவன:

சிறைக் கைதிகள் தங்களது நெருங்கிய உறவினர்களுக்கே உடல் உறுப்புகளை நன்கொடையாக அளிக்க முடியும். இதற்காக குறிப்பிட்ட கைதிகளை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறுவதுடன், மாநில மருத்துவ வாரியமும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மருத்துவ சிகிச்சைக்காக கைதி மருத்துவமனையில் தங்கும் காலம் பரோல் காலம் ஆக கருதப்படும். அதற்கான மருத்துவச் செலவுகளை சிறைத் துறை கவனிக்கும். உறுப்பு தானம் செய்வதனால் நன்கொடை அளிப்பதற்காக கைதிக்கு தண்டனை காலத்தில் எந்த விதமான சலுகைகளும் வழங்கப்படாது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.