கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் நிலையில், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. எனவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வீட்டை விட்டு வெளியே வர நேர்ந்தால், மாஸ்க் அணிந்து வருமாறும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், கைகளை கண்கள், மூக்கு, காதுகள் ஆகியவற்றை தொடாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இதுவரை 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 52 பேரும் கேரளாவில் 40 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவிருக்கிறது. ஆனால் அந்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக மிக குறைவு. 

வெறும் 3 பேர் மட்டுமே தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத்துறை, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வுகளை தொலைக்காட்சிகளின் மூலமாகவும் நடிகர்களின் மூலமாகவும் மேற்கொண்டு வருகிறது. 

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த சுய ஊரடங்கை பின்பற்றுமாறு மாநில அரசும் கேட்டுக்கொண்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூடுமாறு உத்தரவிட்டு, அந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. உத்தரவு பிறப்பித்ததோடு இல்லாமல், அதை பின்பற்றுவதையும் அரசு உறுதி செய்துவருகிறது. 

வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை தீவிர பரிசோதனைக்கு பிறகு தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவருகிறது. 

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசின் பணி திருப்திகரமானதாக இருப்பதாக முதல்வர் பழனிசாமிக்கு ஃபோனில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.